Poetry

கற்பனையில் மட்டும் தாய்

தாயின் பாசத்திற்கும்
பாட்டியின் பாசத்திற்கும்
இடையில் சிக்கி
தவித்தது
ஓர் குழந்தை!

தாய்
தன் குழந்தையின்
பாசத்திற்கு ஏங்கிய போது…
பாட்டி
தன் உலகமே
அந்த குழந்தை
என்றிந்தாள்…

தன் குழந்தையின் நலம்..
தன் குடும்பத்தின் நிம்மதி…
கருதி
விட்டுக்கொடுத்தாள்
தாய்மை உணர்வை…
கட்டுபடுத்திக் கொண்டாள்
ஏக்கத்தை..
அந்த தாய்..

குழந்தையை
மார்போடு அனைத்துக் கொள்ளாமல்
தூரம் நின்று ரசித்து சிரித்தாள்..
கற்பனையில் வாழ்ந்தாள்..
தன்னையே ஏம்மாற்றி கொள்வதை
அறியாத
அந்த தாய்…

Photo Courtesy: Internet

பெண்ணாக என் பயணம்…

அழகிய குடும்பத்தில்
மூத்த பிள்ளையாய்
முந்தி பிறந்தேன்….

வீடு பள்ளி
தவிர வேறு இடம்
தெரியாமல் வளர்ந்தேன்…

குழந்தை மனம்
ஆசை பட்டாலும்
பெற்றோருக்கு
சுமை கொடுக்க
மகள் மனம்
தடுக்க..
தடுமாறி..
பின்
நிலை கொண்டேன்…

ஒரு நல்ல தோழி
தங்கை என்று
உணராமல்
சண்டையிட்டு
பொறாமை கொண்டேன்…

அன்புத் தம்பியை
அரவணைத்த
தோழி ஆனேன்…

படிப்பை தவிர
வேறு கலைகள்
அறியேன்..

பள்ளி
படிப்பு
பட்டப்படிப்பு
பண்பு என
உயிர் தோழியை
பின் தொடர்ந்தேன்..

சோம்பேறியென
பட்டமளிக்க பட்டு
எதனாலென்று
புரியாமல் வியந்தேன்…

காதலில் சிக்க கூடாதென்றாலும்
மனம் தடுமாறிய சில நொடிகளை
வென்று வந்தேன்….

படிப்பில்
அலுவலில்
வெற்றி கொண்டாலும்
மனையாளாய்
வெற்றி காண தவிக்கிறேன்..

கணவனே
காதலனாக
தோழனுமாக
கர்வம் கொண்டேன்
வாழ்க்கையை
அவனிடமிருந்து
கற்றும் கொண்டேன்…

என் அடையாளத்தை
என்னால் மட்டுமே
மாற்ற முடியும்
என்றிருதேன்..
என்னை மாற்ற
எண்ணுக்குள்ளிருந்து
ஒருவன் வந்தான்..
என் மகனாய்!
மாறினேன்..

யாரையும்
புண்படுத்த கூடாது..
அனைவரின் சந்தோஷம்
என் சுயமரியாதை விருப்பத்திற்கு
இடையில் சிக்கி
இன்னல் வெளிப்படாமல்
இனிமையாய் சிரித்தேன்…

ஒவ்வொரு
அவமானத்திற்கும்
காலம் பதில் சொல்லுமென
காத்திருக்கிறேன்….

கண்ணீரை
ஆயுதமாக அல்ல!
என் மனஜன்னலை
உடைத்து
கொட்டினேன்…

வெற்றிகளை
மனதில் கொண்டு
முயற்சிகளில்
சோர்வுகொள்ளாமல்
பயணிக்கிறேன்…

நேற்றும் இன்றும்
எப்போதும்
உண்மையான நான்
யாரென தேடுகிறேன்…

சரண்யா பொன்குமாரக
பிறந்து
சரண்யா சங்கராக
பயணிக்கிறேன்…

Photo Courtesy: The Internet

மகனுக்காக…

உன்னுடன் 
உனக்காக
வாழும் 
ஒவ்வொரு நிமிடமும் 
என்னை மறக்கச் செய்கிறது!
 
வியந்தேன் 
என்ன அழகான 
பூவென்று…
உன் விரல்கள்!
 
மழலை, 
பேச்சில் மட்டும் இல்லையடா 
உன் கண்களிலும் தான்!
 
புன்னகையின் ஆனந்தம் 
உணர்ந்தேன்   
உன்னாலடா!
 
தவழ்ந்து
என்னிடம் 
நீ வரும்முன்…
என் மனம் 
இறக்கை விரித்து 
பறந்து 
வருமடா 
உன்னிடத்தில்…
Photo Courtesy: The Internet

கடல்

கடல்  
குழந்தையை
சந்தித்தேன்!
 
ஓயாமல் 
அலை அலையாக 
மழலை பேச்சு..
 
கவலையின்றி 
சத்தமிட்டு 
விளையாடிக் கொண்டிருந்தது.. 
 
என்னை 
பிடிக்கவில்லை போல..
ஏனோ என்னிடம் 
ஏதோ 
சொல்ல வந்துவிட்டு 
சொல்லாமல் சென்றது…
 
வரம் தான்..
என்றும்
குழந்தையாகவே இருக்கும் 
கடல்!!!
Photo Courtesy: The Internet

ஆசை படு!!!

பூமியில் விழுந்த விதைகள் எல்லாம் முளைப்பதில்லை
எழுதியது எல்லாம் வெளியிடப் படுவதில்லை
விழுந்த மழை துளிகள் எல்லாம் கடலைச் சேர்வதில்லை
புறப்படும் கால்கள் எல்லாம் இலக்கை அடைவதில்லை
ஏன் உருவான கருவெல்லாம் எல்லாம் பிறப்பதில்லை

இருந்தும்…
இன்னும் விதை விதைக்கப்  படுகிறது
தளராமல் பேனா எழுத்தை பதிவு செய்கிறது
தவறாமல் வானம் மழை பொழிகிறது
நம்பிக்கையோடு கால்கள் நடை போடுகிறது
உலகத்தை பார்பேன் என்ற
தீர்மானத்துடன் ஒவ்வொரு கருவும் வளர்கிறது

அப்படி இருக்க
ஆசைப்பட்டவை எல்லாம் மட்டும் நடப்பது எப்படி சாத்தியம் !!!
எனவே
உன் மனக் குழந்தைக்கு மீண்டும் ஆசை பட
கற்று கொடு
என் அன்பு தோழியே!!!

Photo Courtesy: The Internet

 

நினைத்த தருணத்தில்…

நினைத்த தருணத்தில்…
உன்னை
கண்முன் காணும்
காட்சி தானோ
காதல்!!!

அடுத்த நொடி
நான் என்ன செய்வேன்
என
நீ இந்த நொடி
அறிவது தானோ
காதல்!!!

என் கண்ணீர் துளி
தரை தொடுவதற்குள்
உன் விரல்களை
தொடுவது தானோ
காதல்!!!

என் பெற்றோரும்
கற்றுக் கொடுக்காத
விஷயங்களை
நீ
கற்றுக் கொடுப்பது தானோ
காதல்!!!

கருவைக்கூட
எனக்காக
நீ சுமக்க
தயாராய்
இருப்பது தானோ
காதல்!!!

என் எண்ணங்களை
கொட்டித் தீர்க்க
உன் மனதை
திறந்து வைப்பது தானோ
காதல்!!!

அப்படி என்றால்
காதலின்
இலக்கணமே
நீ!!

குறுங் கவிதைகள்

ஓர்
கவிதையின் தாக்கம்
உன் பார்வை

************************

 

பூக்களை
நினைவுச் சின்னமாக
புத்தகத்தில் வைக்க
புத்தகமே மணந்தது
நினைவாலே!!!

**********************

நாட்குறிப்பு
எழுதுவதை
விட்டுவிட்டேன்.

உன்னை விட
என்னை புரிந்து கொண்டது
அந்த நாட்குறிப்பாக கூட
இருக்க கூடாது என்று!!!

*******************************

தயக்கமின்றி
கட்டளையின்றி
பணியிடம் செல்லும்
என் கால்களுக்கு
எப்படி சொல்லுவேன்
இனி வேறு இடமென்று!!!

*******************************

விலை கொடுக்க
முடியாதது
நட்பு
என்றார்கள்.
சிறந்த நட்பிற்கு
விலை கொடுத்துவிட்டேன்
“புத்தகம்”.